• 7 years ago
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 4 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின், ராஜ்வாடா கோட்டை அருகே உள்ள சாலையில், கூலித்தொழிலாளிகள் இரவு தூங்குவது வழக்கம். அதில் கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல, பலூன் விற்கும் தொழிலாளி ஒருவர் தன் மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார்.

காலையில் குழந்தையை எங்கு தேடியும் காணாத நிலையில், சாலை அருகே இருந்த கடையில், குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. குழந்தையின் தலை மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்தன.

போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், குழந்தை அருகில் தூங்கிக் கொண்டிருந்த நபர், குழந்தையைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அந்தமனித மிருகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், உன்னவ் தொகுதியில் 14 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

Category

🗞
News

Recommended