• 8 years ago
ஒவ்வொரு திரைப்படச் சுவைஞரும் மணிரத்தினத்தின் படங்களுக்குச் சிறப்பான இடத்தைத் தருவார். பெரும்போக்காகச் சென்றுகொண்டிருந்த திரைப்பட மொழியை மெல்ல மெல்ல காட்சி மொழியாக உருமாற்றிய தென்னிந்திய இயக்குநர் அவர். தம் முதற் படத்திலேயே மூக்கின்மேல் விரலை வைக்கும் வித்தையைச் செய்துகாட்டாமல் படிப்படியாக வியக்க வைத்தவர்.மணிரத்தினத்தின் மீதான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. அவருடைய ஒவ்வொரு படத்தின் பின்னும் சீரான வளர்ச்சியைப் பெற்றது. பகல்நிலவு, இதயக்கோவில் ஆகிய படங்களில் அவர் பிற்காலத்தில் தவிர்க்க முடியாத இயக்குநராக இனங்காணப்படுவார் என்பதற்கான எந்தத் தடயத்தையும் காண முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதயக்கோவில் திரைப்படத்தில் கவுண்டமணியைக்கொண்டு நகைச்சுவைத் தனிக்கதையையும் எடுத்து வைத்திருப்பார். அக்னி நட்சத்திரத்திலும் இதயத்தைத் திருடாதே திரைப்படத்திலும் தனி நகைச்சுவை அத்தியாயங்கள் உள்ளன. அவற்றுக்கும் கதைப்போக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா...," என்று ஜனகராஜ் கத்துகின்ற காட்சிக்கும் அக்னி நட்சத்திரத்தின் கௌதம் அசோக் மோதல்களுக்கும் என்ன தொடர்பு ? "லட்சுமிபதி... முதலாளி..." என்று ஜனகராஜும் விகே இராமசாமியும் உரையாடுகின்ற காட்சிகளுக்கும் ஒரே தந்தையின் வழியாய் இருவேறு தாயார்க்குப் பிறந்த நாயகர்களின் முரண்காட்சிகளுக்கும் ஏதேனும் இணைப்பு உண்டா ? இல்லவே இல்லை.
திரைப்படத்தின் வணிக வெற்றிக்காகப் போதியவாறு இணங்கிச் சென்றவர்தான் மணிரத்தினமும். ஆனால், அடுத்தடுத்த படங்களில் அவர் அத்தகைய உத்திகளைக் கைவிட்டுவிட்டு முழுமையான தரமான படமாக்கங்களின்மீது பற்றுடையவர் ஆனார். அதே நேரத்தில் மணிரத்தினத்தின் படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் எளிமையாக இருந்தாலும் பிற்பாடு எண்ணிச் சிரிக்குமாறு இருந்திருக்கின்றன. "போடா டேய்... மடையா... உட்காருடா சோமாறி," என்று டில்லி சிங்குக்குத் தப்பும் தவறுமாகத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் மௌனராகம் திவ்யாவின் நகைச்சுவைக் காட்சி அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இன்றைக்கும் அந்தச் சிங்கின் உச்சரிப்பில் கூறப்படும் "போடா டேய்..." காதுக்குள் ஒலிப்பதை உணர்கிறேன்.
A nostalgia on Manirathnam's Thiruda thiruda, a 90's classic.

Category

🗞
News

Recommended