அரசியல்வாதி ரஜினியின் கொள்கை என்ன?-மக்கள் கேள்வி- வீடியோ

  • 7 years ago
தம்மிடம் கொள்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டுவிட்டதாக அலறுகிறார் தனிக்கட்சி தொடங்கப் போகும் ரஜினிகாந்த். அப்படியானால் தமிழகம் எதிர்கொண்டுள்ள அத்தனை பிரச்சனைகளிலும் வாய்மூடி மவுனியாகவே இருந்து கொண்டு வினோத அரசியலைத்தான் ரஜினி முன்னெடுக்கப் போகிறாரா? என்பதுதான் மக்களின் கேள்வி.

அரசியலுக்கு வரப் போகிறேன் என 30 ஆண்டுகளுக்கு மேலாக டபாய்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் எதிரிகளே இல்லாத "நல்ல நேரம்" பார்த்து தனிக்கட்சி தொடங்குவேன்; 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என பிரகடனம் செய்திருக்கிறார். ஆனால் கட்சி பெயர் எப்போது அறிவிப்பு, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதுவுமே சொல்லவில்லை.அத்துடன் தாம் அரசியலுக்கு வருவதாக பேசிய ரஜினிகாந்த், தம்மிடம் கொள்கை என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதாகவும் தமக்கு தலை கிறுகிறுத்துப் போனதாகவும் கிண்டலாக கூறியுள்ளார். அரசியலுக்கு வரக் கூடிய எந்த ஒரு நபருக்கும் ஏதேனும் ஒரு அடிப்படை கொள்கை என்பது இருக்கத்தான் வேண்டும். இதுதான் உலக நியதி.

ஆனால் அரசியலில் குதித்துவிட்டாலே முதல்வர் நாற்காலி தம்மை தேடி பறந்துவரும் "ஸ்டிரெய்ட்டா" என்ற மன நிலையில் இருப்பவர்களுக்கு கொள்கை என்ன என்பது நிச்சயம் அலர்ஜியாகவே இருக்கும் போல. அடிப்படை கொள்கைக்கே நடுங்கும் ரஜினிகாந்த் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகம் எதிர்நோக்கி வரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு என்ன மாதிரியான பதில்களைத் தருவார் என நினைக்கவே முடியவில்லை.

காவிரி நதிநீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து போய் நீதிமன்றத் தீர்ப்புகள் செயலற்றதாகிப் போய் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியாக கிடக்கிறது. ரஜினியின் சொந்த மண்ணான கர்நாடகத்தின் இந்த பச்சை படுபாதக துரோகத்துக்கு எதிராக ரஜினி என்ன நிலைப்பாடு எடுப்பார்? இரு மாநிலங்களிலும் இருக்கக் கூடிய மடாதிபதிகள் மூலமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என "ஆன்மீக அரசியல்" செய்வாரா? என்கிற கேள்வியும் எழுகிறது.
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கிடும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வி.பி.சிங் அரசு நடவடிக்கை எடுத்த போது இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் முற்படுத்தப்பட்டோர் மூர்க்கமாக அதனை எதிர்த்தனர்... கோஸ்வாமிகளை தீக்குளிக்க வைத்தனர். ஆனால் தமிழகம் அமைதி பூமியாக அந்த நடவடிக்கையை கொண்டாடியது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து தேசமெங்கும் வன்முறை வெடித்தது. ஆனால் தமிழகம் அமைதி காத்தது. ஏனெனில் அரசியல் ரீதியாக திராவிட இயக்க சிந்தனைகளால் தமிழகம் பண்படுத்தப்பட்ட பூமி. இப்படியான தமிழகத்தின் உயிர்நாடியான சமூக நீதி பிரச்சனைகளுக்கு தீர்வாக "ஆன்மீக அரசியலை" பேசும் ரஜினிகாந்த் முன்வைக்கப் போகும் கொள்கை என்ன என்பதும் தமிழகத்தின் கேள்வி.





The Political observers are questioning the meaning of Rajinikanth's so called 'spiritual politics'. Also they feel that Rajinikanth's spiritual politics will not work in Tamil Nadu.

Recommended