A Lyric to APJ.Abdulkalam | Vairamuthu

  • 4 years ago
விண்ணைப் புதைத்தோம் மண்ணிலே! - கவிப்பேரரசு வைரமுத்து

காலமே அழுவ தென்ன?
கலாமை நீ தொழுவ தென்ன?
கோலமே குலைந்த வண்ணம்
குழந்தையர் குழைந்த தென்ன?
சீலமாய் வாழ்ந்து தன்னை
தேசத்திற் கர்ப்ப ணித்தோன்
காலமே ஆவ தில்லை
காற்றுக்கு மரண மில்லை

பாறையின் இடுக்கி லிட்ட
பறவையின் எச்ச மொன்று
கோரைபோல் முளைத்துப் பின்னர்
குடைமரம் ஆதல் போலே
கூரையும் சிதைந்த வீட்டில்
குறையோடு பிறந்த மைந்தன்
பாரையே ஆண்டு சென்றான்
பாமரர் பெருமை கொண்டார்

ஏவினான் கணையை விண்ணில்
இளைஞரே எழுக வென்று
கூவினான் பிறந்த மண்ணில்
கொள்கையை வாழ்ந்து காட்டி
மேவினான் நாடு தோறும்
மேதையின் விதைகள் தம்மைத்
தூவினான் என்ன மாயம்
துளிர்த்தது காய்ந்த தேசம்

ஏணியாய்ப் பிறந்து விட்டால்
இருமிதி பொறுக்க வேண்டும்
ஆணியாய்ப் பிறந்து விட்டால்
அடியெலாம் தாங்க வேண்டும்
தோணியாய்ப் பிறந்து விட்டால்
தொடர்ந்து நீ நனைய வேண்டும்
ஞானியாய்ப் பிறந்து விட்டான்
ஞாலத்தின் பொறுமை கொண்டான்

மனிதரை வெல்வ தொன்றே
மரணத்தின் தொழிலென் றாகும்
மனிதரின் பெருமை யெல்லாம்
மரணத்தை வெல்வ தாகும்
தனியொரு மனித னாகி
சமூகமே தானு மான
புனிதனே சாவை வெல்வான்
புண்ணியன் வென்று விட்டான்

அலைகளே எழுவீர்! அந்த
அந்தணன் துயிலு கின்ற
நிலைகளில் விழுவீர்! அன்னோன்
நெற்றியை வணங்கிச் செல்வீர்
கலைகளே நாளை தோன்றும்
கவிகளே! கலாமைப் போன்ற
விலையிலா ரத்தி னத்தை
வீட்டுக்கு வீடு செய்வீர்!
- கவிப்பேரரசு வைரமுத்து
Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs

Recommended