• 8 years ago
ஜெயலலிதா வாழ்கை வரலாறு, அவரின் அரிய புகைப்படங்கள்.

அம்மா! அம்மா எனும் அந்த ஒற்றைப் பெயர்ச் சொல் வினைச் சொல்லாக மாறிப்போன நாள் அன்று. டிசம்பர் மாதம் சமீபகாலமாக தமிழகத்திற்கு அதிர்ச்சி தரும் மாதமாகி விட்டது. ஜெயலலிதா என்கிற அரசியல்வாதியின் மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அம்மா என்கிற ஆளுமை தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அதற்கான சிறிய உதாரணம், அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட போதிலும் அவரை முன்வைத்தே அதிமுகவிலும், அதற்கு வெளியிலும் அரசியல் நடத்த வேண்டியிருக்கிறது.

பெரியார் முன்வைத்த திராவிட அரசியலை செய்யமுடியாவிட்டாலும், அண்ணாவும் எம்ஜியாரும் ஆசைப்பட்ட திராவிட அரசியலை மிகச் சிறப்பாகவே செய்தார் ஜெயலலிதா.

அவர்மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுவந்தபோதிலும் அது எதுவும் அவர் இறக்கும்வரை நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சரியாகச்சொன்னால் அவரின் இருப்பே அவர்மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவிடாமல் செய்தது. அதுவே அவரின் பலம்.

எப்பொழுதுமே ஜெயலலிதா என்ற முகமும், அம்மா என்ற முகமும் நேரெதிராகவே இருந்துவந்துள்ளது. தாலிக்கு தங்கம், இளம்தாய்மார்கள் பொது இடங்களில் குழந்தைகளுக்கு பால் புகட்ட தனிஅறை, பெண்களுக்கு இலவச நாப்கின் போன்ற திட்டங்கள் பெண்களின் உணர்வுகளை மிக நுணுக்கமாக புரிந்தவர்களால் மட்டுமே நிறைவேற்ற இயலும். இந்த அம்மா என்ற முகம், மதுவிற்பனையையே அரசின் பிரதான வருமானமாக மாற்றிய ஜெயலலிதா என்ற முகத்திற்கு நேரெதிரானது.

மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற நீர்மேலாண்மையின் மிகப்பெரிய பாய்ச்சலையும் அவரால் செய்யமுடிந்தது. மிக எளிதாக நடந்திருக்க வேண்டிய செம்பரம்பாக்கம் ஏரி திறப்பை அத்தனை கொடூரமானதாகவும் மாற்றமுடிந்தது.

கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்த லேப்டாப் என்ற தொழில்நுட்பம் 'அம்மா லேப்டாப்' என்ற பெயரில் அவர்கள் கையில் கிடைத்தபொழுது, அது மாணவர்களுக்கு கொடுத்த நம்பிக்கை அலாதியானது. அதை அவர்கள் படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டுபவர்களால் என்றும் புரிந்துகொள்ள முடியாது.

நடுத்தர வர்க்கப் பெண்களின் முன்னேற்றம் என்பது, அவர்களால் எப்பொழுது பொருளாதாரத்தைக் கையாளமுடிகிறதோ அப்பொழுது தான் நடக்கும். இந்த மிகப்பெரிய விஷயத்தை 'சுய உதவிக்குழுக்கள்' என்பதின் மூலமாக நிறைவேற்றிக் காட்டினார் அம்மா.

இந்த இளகிய மனதிற்கு அருகில்தான் 'இரும்புப் பெண்மணி' என்ற பெயரும் உள்ளது. அத்தனை தைரியமாக அவரின் கை காஞ்சி மடத்திற்குள் நுழைந்தது. ஜெயேந்திரரின் கைதுப்படலம் என்றென்றைக்கும் ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணியாகவே வைத்திருக்கும். திரு.தனபால் சபாநாயகர் ஆக்கப்பட்டது தலித்திய அரசியலின் எத்துணை பெரிய முன்னெடுப்பு..!

இந்த இரண்டு முகங்களுக்கு இடையேயான வேறுபாடு வெகுஜன மக்களின் அறிவுக்கு எட்டாததாகவே இருந்தது. அதற்குள்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் அரசியல்.

கண்டிப்பாக இன்னும் இன்னும் பல ஜெயலலிதாக்கள் இங்கு உருவாகுவார்கள். ஆனால் 'அம்மா' என்ற இடம் என்றென்றைக்கும் உங்கள் ஒருவருக்கானதுதான்...

Indian Actress and Politician Jayalalitha Jayaram With her Parents Siblings Husband children Family photos and profile.

Category

🗞
News

Recommended